36 மணி நேர வானிலை அறிக்கை: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்.!!!
நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வானிலை மாற்றம் ஏற்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.