அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது.!!!
(கே எ ஹமீட்)
கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நேற்று (02.07.2025) அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன.
இதில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக ஏ.எஸ்.எம்.உவைஸ் தவிசாளராகவும், உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.எப்.நஜீதும் தெரிவு செய்யப்பட்டனர்.
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினரும் ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
தவிசாளர் தெரிவிற்கு சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஏ.எஸ்.எம்.உவைஸ், தேசிய மக்கள் சக்தி சார்பாக எஸ்.பாஹிமா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.
இதில் திறந்த வாக்கெடுப்பின் மூலம் ஏ.எஸ்.எம்.உவைஸ் 11 வாக்குகளும், எஸ்.பாஹிமாவுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. இதில் உவைஸ் 08 மேலதிக வாக்குகளினால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நான்கு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் நடு நிலை வகித்தனர்.
உதவித் தவிசாளராக தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.எப்.நஜீத் சபையில் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இதன் போது சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற மன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏஸ்.உதுமாலெப்பை, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சீ.சமால்டின் உட்பட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பார்வையாளர் அரங்கில் கலந்து கொண்டனர்.