உன்னிச்சை இருநூறுவில் முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில்; நீண்ட காலத்திற்குப் பிறகு ஜும்ஆ தொழுகை மீள ஆரம்பம்.!!!
(எம்.ரி.எம். யூனுஸ்)
உன்னிச்சை இருநூறுவில் பிரதேசத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஜும்ஆ தொழுகை, மிக நீண்ட காலத்திற்குப் பிறகு இன்று (21) வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை தலைவர் மௌலவி ஹாரூன் ரஷாதி ஜும்ஆப் பிரசங்கத்தையும் தொழுகையையும் நடத்தினார்.
இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை செயலாளர் மௌலவி ஜவாஹிர் பலாஹி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன செயலாளர் மௌலவி அல்–ஹாபிழ் ரமீஸ் ஜமாலி, ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இக்பால் (IP), பள்ளிவாசல் தலைவர் பரீட் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள், தப்லீக் ஜமாஅத் சகோதரர்கள், பொதுமக்கள், உலமாக்கள் என பெருமளவினர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம், காத்தான்குடி மீடியா போரம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு பள்ளிவாயல் அபிவிருத்தியும், மீள் குடியேற்ற மீளாய்வு தொடர்பில் பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த இந்தப் பிரதேசத்தை நிரந்தர வாழ்விடமாக மாற்ற வேண்டிய அவசியம் குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை செயலாளர் மௌலவி ஜவாஹிர் பலாஹி வலியுறுத்தினர்.
பள்ளிவாசல் தலைவர் பரீட் பேசுகையில் மக்கள் குடியேற்றம் அதிகரிக்கப்பட வேண்டுமாக இருந்தால் பாதுகாப்பான இருப்பிடம் அமைக்கப்படுவதோடு, யானை தாக்குதல் பிரச்சினைக்கு தீர்வு, தண்ணீர் வசதி போன்ற தடைகளை சுட்டிக்காட்டியதோடு, அவற்றை சரிசெய்ய உடனடி நடவடிக்கைகள் அவசியம் என கூறினார்.
அத்தோடு பூர்வீக மண்ணை பாதுகாப்பதற்கும் மக்கள் மீளக் குடியேறுவதற்கும் காணி இல்லாதோருக்கு காணி வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேவையுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன செயலாளர் மௌலவி அல்–ஹாபிழ் ரமீஸ் ஜமாலி பேசுகையில் இந்த பிரதேசத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளை சம்மேளனம் உரிய முறையில் நிறைவேற்றும் என்றும் முடியுமான உதவிகளை செய்ய ஆயத்தமாக உள்ளதாக குறிப்பிட்டதோடு, மத அடையாளங்கள்தான் ஒரு சமூகத்திற்கான பெரும் அடையாளம் எனவே அதை உரிய முறையில் பாதுகாப்பது கிராமவாசிகளின் கடமை என்றார்.
காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் நூர்தீன் தனதுரையில்; சமூக செயற்பாட்டாளர்கள் கிராம எழுச்சிக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அப்போதுதான் மாற்று சமூகங்களிடமிருந்தும் ஒத்துழைப்பைப் பெற முடியும் என குறிப்பிட்டார்.
அத்தோடு மட்டு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் சுனில் கன்துனெத்தி, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டதோடு, வீதி அபிவிருத்திற்காக ஏறாவூர் நகரசபை தவிசாளர் நளீம் அவர்களை அழைத்து வந்து காண்பித்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடாக ஸகாத் நிதியினூடாக 4 வீடுகளை கட்டிக் கொடுக்குமாறும், சுற்றுலா ஊக்குவிப்பு வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதோடு, இப்பகுதியை சுற்றுலா நட்பான இடமாக உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உன்னிச்சை இருநூறுவில் ஜும்ஆ மீள ஆரம்பிக்கப்பட்டமை, இப்பகுதி சமூக–சமய முன்னேற்றத்திற்கான புதிய அத்தியாயமாகக் கருதப்படுகிறது.












