பிள்ளைகளுக்கு வயதுக்கேற்ற பாலியல் கல்வி முறை அவசியம் – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.!!!
பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களைத் தவிர்க்க, பிள்ளைகளுக்கு வயதுக்கேற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்துவது அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
“6ஆம் தரத்திற்காக வயதுக்கேற்ற வகையில் ஒரு புத்தகத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு, குறிப்பாக குடும்பநல சுகாதாரப் பிரிவு, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
நம் நாட்டில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலுக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இதிலிருந்து பாதுகாப்பதற்காக பிள்ளைகளுக்கு இதுகுறித்து கல்வி வழங்கப்பட வேண்டும் என அந்த பிரிவு எங்களிடம் பரிந்துரைத்துள்ளது.” என்றார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இது ஒரு பாரதூரமான பிரச்சினை என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் எங்களிடம் அறிவித்துள்ளது. தங்களது உடலைப் பாதுகாப்பது குறித்து பிள்ளைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் அதிகார சபைகளுடன் நாங்கள் தொடர்ந்து கலந்துரையாடி வருகிறோம். பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எந்த வயதில், எவ்வாறு, எப்போது இதை அறிமுகப்படுத்துவது என்பதைப் பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.”
“பிள்ளைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது மற்றும் தங்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துத் தகுந்த அறிவு பெறுவது மிக முக்கியம். வயதுக்கு ஏற்ற முறையில் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இதனை சுகாதாரத் துறை நிபுணர்களின் ஆலோசனையின்படி முன்னெடுக்கப்படும்.” என்றார்.