பெருநாளை முன்னிட்டு: வாகன விபத்துகளைத் தடுக்கும் நடவடிக்கை.!!!
– மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி எச்சரிக்கை.
மூதூர் பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் பெருநாள் நெருங்கி வரும் நிலையில், வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.எம். கசாலி முக்கிய எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
“சமூகப் பணியே எம் பணி” என வலியுறுத்திய அவர், குறிப்பாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை அதிக வேகத்தில் மற்றும் கட்டுப்பாடின்றி இயக்குவது குறித்து கவலை வெளியிட்டார். ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று அல்லது நான்கு பேரை ஏற்றிச் செல்லும் அபாயகரமான நடைமுறைகளும் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அதிக சத்தம் எழுப்பியபடி வேகமாகச் செல்லும் இத்தகைய செயல்கள் பெரும்பாலும் விபத்துகளுக்குக் காரணமாகின்றன என்றும் தெரிவித்தார். சமீபத்தில் தோப்பூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று சகோதரர்கள் சிக்கியதுடன், அதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் கடும் எச்சரிக்கையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அதிக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
பிள்ளைகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவது மகிழ்ச்சியானதாக தோன்றினாலும், அது சில சமயங்களில் குடும்பத்தையும் சமூகத்தையும் துக்கத்தில் ஆழ்த்தக்கூடியதாக மாறக்கூடும் என்றும் எச்சரித்தார்.
இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது அனைவரின் பொறுப்பாகும் என குறிப்பிட்ட அவர், சுகாதாரத் திணைக்களம் முன்னிலை வகித்து பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், பிரதேச சபை உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.
