தொல்பொருள் மதிப்புள்ள பொருட்கள் கடத்தல் – ஐந்து சந்தேக நபர்கள் கைது, விசாரணை முன்னெடுப்பு.!!!
-பாறுக் ஷிஹான்-
தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் முச்சக்கர வண்டியில் வைத்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல் ஒன்றிற்கமைய கடந்த 15.03.2026 அன்று மாலை அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவில் உள்ள சல்பிட்டிகம-சந்துன்புர வீதியில் வீதி தடைகளைப் பயன்படுத்தி பொலிஸ் குழுவினர் ஒரு முச்சக்கர வண்டியைச் சோதனையிட்டபோது தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் ஐந்து பேரைக் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வசம் இருந்து ஒரு புத்தர் சிலையும் இரத்தினக்கற்கள் என சந்தேகிக்கப்படும் 3 நீலக்கற்கள் உட்பட முச்சக்கர வண்டி மீட்கப்பட்டிருந்தது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மூன்று பெண் சந்தேக நபர்கள் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிபில மற்றும் மினிப்பே பகுதிகளைச் சேர்ந்த 32 முதல் 62 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். பெண் சந்தேக நபர்கள் மஹியங்கனை மற்றும் ரிதீமாலியத்த பகுதிகளைச் சேர்ந்த 26இ 53 மற்றும் 55 வயதுடையவர்கள் ஆவர். பொலிஸார் மேற்கொண்ட கைது நடவடிக்கையின்போது ஒரு சந்தேக நபர் தப்பி ஓடிவிட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.