மட்டு புகையிரத நிலைய விடுதி பகுதியில் பாரிய தீ; 2 மணித்தியால போராட்டத்தின் பின் கட்டுப்பாட்டிற்குள்.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு சொந்தமான காணியில் ஏற்பட்ட தீ மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இன்று (29) நண்பகல் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதிகள் மற்றும் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்திற்கு அருகிலிருந்த காணியில் தீ சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த தீ தொடர்பில் மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தீகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த தீ விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்ற இராணுவத்தினர், புகையிரத நிலைய காவலர்கள் மற்றும் மாநகரசபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் டினேஸ், மாநகரசபை உறுப்பினர்கள் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதவியளித்தனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸார் ஸ்தலத்திற்கு வருகைதந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பெற்றோல் களஞ்சியங்கள் உள்ள காணிக்கு அருகில் தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் தீகட்டுப்படுத்தப்பட்டுள்ளது.