உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மௌலவி அல்ஹாஜ் எம்.ஐ. ஆதம்லெப்பை (பலாஹி) B.A. மறைவுக்கு – காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இரங்கல்.!!!

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் சங்கைக்குரிய மூத்த உலமாக்களில் ஒருவருமான ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் மர்ஹும். மௌலவி. அல்ஹாஜ். MI.ஆதம்லெப்பை (பலாஹி) BA அவர்களின் மறைவினையிட்டு ஆழ்ந்த கவலையடைகின்றோம்.

வையகத்தில் வாழும் காலப்பகுதிகளில் தனக்கென கணக்கிடப்பட்ட மூச்சுக்களில் பெரும்பாலான பகுதிகளினை அள்ளாஹ்வின் கலாமான அல்குர்ஆனுக்கென பணி செய்து விட்டு, எமது பிரதேசத்தினைச் சேர்ந்த சிறுவர்கள் வளரும் வயதிலே புனித அல்குர்ஆனை பிழைகளின்றி திருத்தமாகவும் சரளமாகவும் தஜ்வீத் விதி முறைகளினை பேனி ஓதுவதற்கு தனது சக்திக்குட்பட்ட வகையில் இன்றளவிலும் கூட நாடளாவிய ரீதியில் விதந்துரைத்து பேசப்படும் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றான அல்குர்ஆன் அபிவிருத்தி சபையின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் இருந்து காத்திரமிக்க பணிகளை முன்னெடுத்து வந்துள்ளதுடன், நடமாடும் அல்குர்ஆனிய மனிதராக வலம் வந்துள்ள நிலையில் அன்னார் எம்மை விட்டும் பிரிந்துள்ளார்.

எமது பிரதேசத்தின் மூத்த புத்திஜீவிகளில் ஒருவரான அன்னார் ஜாமிஅத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியில் இரண்டாவது மாணவனாக வெளியேறி, தன்னை மார்க்க கல்வியுடன் மாத்திரம் சுருக்கி கொள்ளாமல் ஏககாலத்தில் பொதுக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து பயிற்றப்பட்ட ஆசிரியராக தேர்ச்சி பெற்று வெளிவாரி பட்டதாரியாக தன்னை புடம் போட்டு சமகாலத்தில் ஆலிமாகவும் ஆசிரியராகவும் பாத்திரமேற்று சமூகத் தளத்தில் அறிவுப் பணியாற்றியுள்ளார்.

சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்த காலங்களில் பிரச்சினைகளை கையாள்வதில் சமயோசிப் போக்கினை கொண்ட அவர் அவற்றினை தீர்த்து வைப்பதில் நளினப் போக்குடையவராகவும் காணப்பட்டார்.

சம்மேளன நிர்வாக செயற்பாடுகளினை முன்கொண்டு செல்வதில் ஒரு கட்டத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்ட போது அதனை பரோபகாரிகளிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு சிரத்தை எடுத்து முழு மூச்சாக செயற்பட்டு தேவையான நிதிகளினை கொண்டு வந்து சேர்ந்தார்.

சம்மேளனத்தின் கீழ் செயற்படும் Kattankudy Mosques Federation Haj Travels And Tours இன் பிரதம வழிகாட்டியாக சென்று ஹாஜிகளுக்கு வழிகாட்டல்களினையும் சிறப்பான சேவைகளினையும் வழங்கி அனைவரினதும் நன்மதிப்பினையும் பெற்றிருந்தார்.

சம்மேளனத்தின் நிரந்தர வருமானத்திற்கென திருகோணமலைப் பிரதேசத்தில் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு முழுமைப்படுத்தும் காலத்தில் இவரது பணி மகத்தானதென்பதுடன், அதற்கு தேவையான நிதிகளினை லாவகமாக கடன் அடிப்படையிலும் கொண்டு வந்து சேர்த்தார்.

தனது சொந்த நிதியில் அல்குர்ஆன் பிரதிகளினை அன்பளிப்பாக வழங்குவதில் ஆர்வம் கொண்ட அன்னார் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு அவற்றினை வழங்கு வைப்பதில் ஆத்ம திருப்தி கண்டதுடன், அவர்களுக்கான ஏனைய விடயங்களிலும் சேம நலன்களிலும் அன்பளிப்பு பொதிகள் வழங்கி மகிழ்விப்பதிலும் கன்னும் கருத்துமாக செயற்பட்டார்.

கல்விப் பணி மற்றும் அல்குர்ஆன் பணிகளை முன்னெடுத்து வந்த அன்னார் இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று குறையாத முக்கியத்துவங்களினை வழங்கியதுடன் இதில் பயணித்த மாணவர்களை உற்சாகமூட்டி அன்பளிப்புக்கள் வழங்கி பாராட்டியதுடன், இதில் அடையாளம் காணப்பட்ட வறுமையான மாணவர்களின் எதிர்காலம் சிறப்பதற்கு தேவையான தன்னாலான உதவி ஒத்தாசைகளை வழங்கியதுடன், சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்களினை விட்டு விடாமல் தனவந்தர்களின் உதவிகளினை அனுகி அதனை சாத்தியப்படுத்தியுமுள்ளார்.

எமதூரின் சமூக சமய மற்றும் நிர்வாக விடயங்களில் அச்சாணியாய் செயற்பட்டு அளப்பெரிய சேவைகளினை ஆற்றி தனது பணிகளினை சிறப்பித்து மறுமை வாழ்விற்கான பாக்கியங்களினை சேகரித்துள்ளமையானது சற்று ஆறுதலளிக்கின்றது.

வாழும் காலத்தில் விதைத்த விதைகளுக்கான அறுவடைகளினை தனது மண்ணறை வாழ்வில் அனுபவிக்கும் அதே வேளை மண்ணறையில் வாழும் காலப்பகுதிகளில் நேரடி நன்மைகளினை பெறும் பாக்கியங்களான ஸதகத்துல் ஜாரியா எனும் உயர்ந்த அமலினூடாகவும் அறிவு மற்றும் அல்குர்ஆன் பணிகளினூடாகவும் கிடைக்கப் பெறும் மகத்தான பாக்கியங்களினை இவர் பெற்றுக் கொள்வார் என்பதில் ஜயமில்லை.

இவரது இழப்பால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினரின் மன ஆறுதலுக்காக பிரார்த்திப்பதுடன்,
எல்லாம் வல்ல அள்ளாஹ் அவர்களது அனைத்து முயற்சிகளினையும் பொருந்திக் கொண்டு மறுமையில் மகத்தான பாக்கியங்களினை வழங்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.

நன்றி.

பதில்தலைவர்/ பொதுச் செயலாளர்,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி.
2025.10.16

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709398

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time