வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றவாளிகள் இலங்கைக்கு கொண்டுவரப்படுவார்கள் – அமைச்சர் எச்சரிக்கை.!!!
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலக கும்பலை இலங்கைக்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தற்போது 216 பேருக்கு எதிராக சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 82 பேர் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைக்காட்சி பேட்டியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதுவரை 17 பேர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாதாள உலகத்தைச் சேர்ந்த பலர் டுபாயில் தஞ்சமடைந்துள்ளதுடன், சிலர் வெளிநாட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை அழைத்து வருவதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போலவே எதிர்காலத்திலும் கடுமையான நடவடிக்கைகள் இடம்பெறும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நாட்டில் குற்றச்செயலில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளில் பதுங்கி வாழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனவும், இதற்கான நீதியமைச்சின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.