காத்தான்குடியில் டெங்கு பரிசோதனை – பொலிஸாரும் சுகாதாரத்துறையும் இணைந்து நடவடிக்கை.!!!
(B.M. பயாஸ்)
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அலுவலகம் மூலம் காத்தான்குடி 162 மற்றும் 162-B பகுதிகளில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
டெங்கு நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்ற அதிகாரிகள் மூலம் டெங்கு தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், வீடுகளில் நீர் தேக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மேலும், சுகாதாரத்துக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட சில வீடுகளுக்கு, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கான வழக்கு தொடர்வு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் காத்தான்குடி பொது சுகாதார வைத்திய அதிகாரி U.L. நஸீர்தீன் அவர்களின் கண்காணிப்பில், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் A.M.M. பஸீர் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வின்போது காத்தான்குடி பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி ஜெயசேகர, பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உபதேசக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது.







