டித்வா சூறாவளி தாக்கம் தீவிரம்: நாடு முழுவதும் பலத்த மழை, புயல் காற்று – கடல் பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.!!!
●இன்றைய வானிலை முன்னறிவிப்பு
2025.11.28
“டித்வா” ( Ditwah ) சூறாவளியானது தற்போது திருகோணமலையில் இருந்து தென் திசையாக சுமார் 50 km தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்கின்றது. ஆகையினால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதன் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற பலத்த காற்றும் கனத்த மழையுடனான வானிலையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். இதேவேளை இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பலத்த பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 200 mm இலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்வதுடன் திருகோணமலை, வதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 150 mm இலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணித்தியாலத்திற்கு சுமார் 60 – 70 km வேகத்தில் அடிக்கடி மிகப் பலத்த காற்று வீசக் கூடும். காற்றின் வேகம் சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 80 – 90 km ஆக அதிகரித்தும் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
***************************
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மிகப் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 – 70 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வடமேற்கு திசையை நோக்கி மிகப் பலத்த காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 80 – 90 km ஆக அதிகரித்தும் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பான நிலையில்
காணப்படும்.
மன்னார் தொடக்கம் புத்தளம், கொழும்பு,காலி, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 3.5 – 4.0 m உயரத்திற்கு மேலெளக்கூடும். ஆகையினால் இக் கடல் பிராந்தியங்களை அண்மித்த தரைப் பிரதேசத்திற்கு கடல் அலைகள் உட்புகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
மொஹமட் சாலிஹீன்.