சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் வழமைக்கு – அனைத்து சேவைகளும் இன்று முதல் ஆரம்பம்.!!!
சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
முறைமை சீரமைக்கப்பட்டுள்ளதால், வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் நாட்டின் அனைத்துப் பிரதேச அலுவலகங்களிலும் சாரதி அனுமதிப்பத்திரப் புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் மீண்டும் வழமைபோல் பெற்றுக்கொள்ள முடியும்.
அதன்படி, வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் (Online மற்றும் Offline) சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இன்று (03) முதல் வழமைக்கு வந்துள்ளன.
எவ்வாறாயினும், முறைமை தடைப்பட்ட நாட்களில் சேவைகளைப் பெற முடியாத பொதுமக்களுக்கான விசேட ஏற்பாடுகள் தொடர்ந்தும் அமலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
முறைமைக் கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்ட எழுத்துப் பரீட்சைகள் 2025.11.27 அன்று நடத்தவிருந்த பரீட்சைகள் → 2025.12.08, 2025.11.28 அன்று நடத்தவிருந்த பரீட்சைகள் → 2025.12.09 இந்த பரீட்சைகள், முன்வரிசையாக்கப்பட்ட ஆவணத்தில் (Booking Document) குறிப்பிடப்பட்ட அதே நேரத்திலேயே நடைபெறும்.
முறைமை தடை ஏற்பட்ட 2025.11.27, 28 மற்றும் 2025.12.01, 02 ஆகிய தினங்களில் நேர ஒதுக்கீடு செய்திருந்தவர்கள், அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அரசாங்கத்தின் எந்தவொரு வேலை நாளிலும் வருகை தந்து தமக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்புக் கோரியுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இனிவரும் காலங்களில் தடையின்றி சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.