மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு பிரதேச செயலகங்கள் – வெள்ளத்தால் பாதிப்பு.!!!
● அவசர அனர்த்த நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஈடுபாடு.
மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நீடித்துவரும் சீரற்ற காலநிலை மற்றும் இடைவிடாத கனமழை காரணமாக, எட்டு பிரதேச செயலக பிரிவுகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று (26) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
தற்போதைய வெள்ளநிலை காரணமாக 62 குடும்பங்களைச் சேர்ந்த 210 நபர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, 36 குடும்பங்களைச் சேர்ந்த 132 நபர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், பலத்த காற்றுடன் கூடிய மழையால் 26 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிரான் – புலிபாய்ந்தகல் வீதி வெள்ளநீர் காரணமாக முற்றாக மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரமாகப் பயணிக்க படகு சேவை பிரதேச செயலகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெல்லாவெளி – மண்டூர் வீதி முழுவதும் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவுவதற்காக உழவு இயந்திரம் மற்றும் லோறி சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று முதல் 24 மணி நேர அவசர சேவையை செயல்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அவசர உதவிகளுக்காக பொது மக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
📞 065-2227701
📞 117 (அவசர ஹாட்லைன்)
இன்று காலை 8:30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை மட்டக்களப்பு நகரில் 63.90 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியான மழை காரணமாக கூடுதல் முன்னெச்சரிக்கை அவசியம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



