காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தில் – முதியோர் கௌரவிப்பு மற்றும் இரத்ததான முகாம்.!!!
சர்வதேச முதியோர் வாரத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த, பல்வேறு நிகழ்வுகள் கடந்த வெள்ளி (03) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (05) சிறப்பாக இடம்பெற்றது.
காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்தின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் கே.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில். வெள்ளிக்கிழமை அதிகாலை ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி மாணவர்களால் ஹத்தமுல் குர்ஆன் நிகழ்வு முதியோர் இல்ல அஸீஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
மாலை முதியோர் கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் மற்றும் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதியோர் இல்லத்தில் உள்ள 64 முதியோர்கள் மற்றும் 18 கிராம சேவகர் பிரிவுகளில் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கும் 18 முதியவர்கள் ஆகியோருக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், முதியோர் வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதை, பேச்சு, பாடல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் நடுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டதோடு. முதியோர் இல்ல ஊழியர்களும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இரவு காத்தான்குடி கலைஞர்களால் முதியோர்களை மகிழ்விக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இதனுடன், ஞாயிற்றுக்கிழமை (05) முதியோர் தினத்தை முன்னிட்டு வருடாந்தம் நடாத்தப்படும் இரத்ததான முகாம் நான்காவது தடவையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.ஜே. அருள்ராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு இரத்ததானம் வழங்கினார்.
“எமது மரியாதைக்குரிய முதியோர்கள்” எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். றஊப், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். ஜறூப், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ. நஜிமுதீன் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.













