“Fast and Clean” வேலைத்திட்டம் தீவிரமாக முன்னெடுப்பு.!!!
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் நிர்வாக செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பொதுமக்களுக்கு வினைத்திறனான, துரிதமான சேவைகளை வழங்குவதற்கும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எச்.எம். பைறூஸ் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சேவை வழங்கும் இடங்களில் காணப்படும் சுத்தம், பணியாளர்களின் உழைப்புத்திறன், பணிசார் மனநிலை, அலுவலகச்சூழலின் தரம் என்பன சிறப்பான சேவையை வழங்க உதவுமென தவிசாளர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.
இதனடிப்படையில், சபைக்குச் சொந்தமான கட்டடங்கள், அலுவலகங்கள் அனைத்தும் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு, தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் சீரான பணிச்சூழலில் செயற்படுமாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தவிசாளர் எம்.எச்.எம். பைறூஸ் அவர்களின் “Fast and Clean” என்ற எண்ணக்கருவை முன்னிறுத்தி ஒரு மாத காலத்திற்குள் சபையின் நிர்வாக முறை, அலுவலகங்கள் மற்றும் கட்டடங்களின் உட்கட்டமைப்பை முழுமையாக சீரமைப்பதற்கான செயற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
அச்செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, தவிசாளர் நேற்று முன்தினம் (23) சபையின் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ வாகன தரிப்பிடத்தைப்பார்வையிட்டு அங்கு காணப்பட்ட பழைய, பயன்படுத்தப்படாத உபகரணங்கள் மற்றும் பொருட்களை உடனடியாக அகற்றவும், பயன்பாட்டிலுள்ள, தேவையான பொருட்களை மட்டும் சீராக களஞ்சியத்தில் வைத்திருப்பதற்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பணிப்புரைகளை வழங்கினார்.
மேலும், தரிப்பிடத்தின் சுற்றுச்சூழலை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பேணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் பணியாளர்களுக்கு பாதுகாப்பான, ஊக்கமளிக்கும் பணிச்சூழல் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம். பைறூஸ் அவர்களின் மேற்பார்வையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாகம், சுத்தமான சூழல், வினைத்திறனான சேவைகள் என்ற மூன்றையும் அடிப்படையாகக்கொண்டு மக்கள் நலன்சார்ந்த சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.




