விவசாயிகளுக்கு வாரத்திற்கு 300 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் – எம்.ஏ. நளீர் கோரிக்கை.!!!
-நூருல் ஹுதா உமர்-
அம்பாறை மாவட்டம் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ள மாவட்டமாக காணப்படுவதால், தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என ஐக்கிய மக்கள் முன்னணி பிரதித்தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, தற்போது வாரத்திற்கு 75 லீட்டர் என்ற அளவில் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு விவசாய நடவடிக்கைகளுக்கு முற்றிலும் போதாது. ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள குறைந்தது 20 லீட்டர் எரிபொருள் தேவையாகும் நிலையில், இந்த ஒதுக்கீடு நடைமுறையில் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, குறிப்பாக உழவு இயந்திரங்களுக்கு விவசாய நடவடிக்கைகளை சீராக செய்ய வாரத்திற்கு குறைந்தபட்சம் 300 லீட்டர் எரிபொருளாவது ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், உழவு இயந்திரங்களை கலப்பையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், மற்ற வாகனப் பயணிகளுக்கும் ஆபத்து விளைவிக்கும் சூழல் உருவாகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், எரிபொருளை கலன்களில் (containers) வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது விவசாய நடவடிக்கைளை மேற்கொள்ளும் காலம் என்பதால் விவசாயத்தை பாதுகாக்கவும், உற்பத்தியை நிலைநிறுத்தவும் ஜனாதிபதி, பிரதமர், விவசாய அமைச்சர், எரிசக்தி அமைச்சர் போன்றோர்கள் தலையிட்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



