எரிபொருள் சேமிப்பு நோக்கில் ஏப்ரல் 16, 17 அரச சேவைகள் இணையவழியில் நடத்த அரசாங்கம் பரிசீலனை.!!!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உருவாகியுள்ள சவால்களை முன்னிட்டு, எரிபொருள் மற்றும் வலுசக்தி பயன்பாட்டைச் சேமிக்கும் நோக்கில் எதிர்வரும் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அரச சேவைகளை இணையவழி (Online) மூலம் முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
அரச சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்து செல்ல நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று இணையவழி மூலம் நடைபெற்ற போது இந்த விடயம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அரச நிறுவனங்களில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பலனாக, கடந்த மார்ச் 31 ஆம் திகதி வரை சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தனது டீசல் நுகர்வை 42 சதவீதத்தால் குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எதிர்வரும் ஏப்ரல் 7 மற்றும் 9 ஆம் திகதிகளில் பாடசாலை மட்டத்தில் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பல்கலைக்கழகங்கள் இயலுமான சந்தர்ப்பங்களில் இணையவழி மூலம் தமது கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.