மட்டக்களப்பில் 2025–2030 போசாக்கு பல்துறைச் செயல் திட்டம் – நடைமுறைப்படுத்தும் பணிகள் ஆரம்பம்.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் போசாக்கிற்கான பல்துறைச் செயல் திட்டம் (Multi Sector Action Plan for Nutrition – MSAPN) 2025 முதல் 2030 வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், இதனை முன்னிட்டு கலந்துரையாடல் ஒன்று இன்று (07) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி ஹில்மா தஹாநாயக்க பங்கேற்றார்.
போசாக்கு தொடர்பான சவால்களை அதிகமாக எதிர்நோக்கும் முன்னுரிமை மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று மத்தி, மண்முனை மேற்கு என நான்கு பிரதேச செயலக பிரிவுகள் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, பிரதேச செயலக ரீதியில் முன்வைக்கப்பட்ட தேவைகள், துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களுடன் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யுனிசப் நிறுவன சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து முகாமையாளர் வைத்தியர் அப்னர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ், SUN PE நிறுவன திட்ட பணிப்பாளர் விஷாக்கா திலகரத்ன, துறைசார் நிபுணர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.











