மட்டக்களப்பில் இரு மகள்களை வன்புணர்வு செய்த தந்தைக்கு; 20 வருட கடூழிய சிறைத்தண்டனை.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 7 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களை வன்புணர்வு செய்த தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தையார், உளநலப் பிரச்சனை கொண்ட தனது ஒரு மகள் உட்பட இரு மகள்களையும் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்றன. கடந்த 27ஆம் திகதி, சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை அடிப்படையில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் கடந்த 12ம் திகதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த முதலாவது குற்றச்சாட்டுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20,000 ரூபா அபராதமும், சிறுமிக்கு 1 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்குமாறும் உத்தரவிடப்பட்டது.
அதேபோல், 7 வயது சிறுமிக்கு எதிராக நிகழ்த்திய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 20,000 ரூபா அபராதமும், சிறுமிக்கு 1 இலட்சம் ரூபா இழப்பீடாக வழங்குமாறும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
இரு 20 வருட கடூழிய சிறைத்தண்டனைகளும் ஒரே நேரத்தில் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், மொத்தமாக 40,000 ரூபா அபராதமும் 2 இலட்சம் ரூபா இழப்பீடும் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.