கடல்சார் ஆபத்து அதிகரிப்பு: அனைத்து மீன்பிடிப் படகுகளும் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்லத் தடை.!!!
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் மிக ஆபத்தான மற்றும் சீரற்ற வானிலை சூழ்நிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து கடல் பகுதிகளிலும் மீன்பிடிப் படகுகள் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது ஆபத்தான சூழ்நிலை காணப்படுவதால் கடல் பிராந்தியங்களில் தொழிலில் ஈடுபட்டு வரும் அனைத்து மீன்பிடிப் படகுகளும், உடனடியாக கரைக்குத் திரும்பவோ அல்லது அருகிலுள்ள பாதுகாப்பான கடல் பகுதிகளில் தஞ்சமளிக்கவோ வேண்டும் என அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை தொடர்பான எதிர்கால அறிவிப்புகள், எச்சரிக்கைகள் மற்றும் வானொலிச் செய்திகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் தகவல்களை மிகுந்த அவதானத்துடன் கவனிக்குமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.