ஈரான் தாக்குதல்: கத்தார் இயற்கை எரிவாயு உற்பத்திக்கு கடும் பாதிப்பு – 17% திறன் சேதம்.!!!
ஈரானின் தாக்குதல்களால், கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தித் திறனில் சுமார் 17 சதவீதத்தை வழங்கும் முக்கிய ஆலைகள் சேதமடைந்துள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாத் அல்-காபி தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த இந்த ஆலைகளை முழுமையாகச் சீரமைப்பதற்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த அல்-காபி, “கத்தார் மற்றும் இந்தப் பிராந்தியம், குறிப்பாக ஒரு சகோதர முஸ்லிம் நாடான எங்களை, ரமலான் மாதத்தில் இவ்வாறு தாக்கப்படும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், தாக்குதலால் சேதமடைந்த இரண்டு உற்பத்தி அலகுகளின் காரணமாக, அரசுக்குச் சொந்தமான கத்தார் எனர்ஜி நிறுவனம், இத்தாலி, பெல்ஜியம், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான LNG விநியோகத்தில் ‘ஃபோர்ஸ் மஜூர்’ (Force Majeure) நிலையை அறிவிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த சேதமடைந்த உற்பத்தி அலகுகளை உருவாக்க சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திலும், LNG சந்தையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.