நாட்டின் அனைத்து இன, மத, மொழி தனித்துவங்களையும் பேணி பாதுகாக்க வேண்டியது அவசியம் – மனோ கணேசன்.!!!
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் தமிழ்–முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இடையிலான அவசர சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில், இன்று (22) இடம்பெற்றது.
இனவாதத்தை முற்றிலும் ஒழிக்கவும், நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், “இலங்கையர் தினம்” கொண்டாட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஒத்துழைப்பை ஜனாதிபதி அனுர கட்சித் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தனது உரையில் கூறியதாவது: இனவாதத்தை ஒழிக்க நீங்கள் கோரும் ஒத்தாசைகளை முழுமையாக வழங்குவோம். நாட்டின் அனைத்து இன, மத, மொழி தனித்துவங்களையும் பேணி பாதுகாக்க வேண்டியது அவசியம். அதே சமயம் ‘இலங்கையர் அடையாளத்தை’ வளர்க்க வேண்டும். இலங்கையில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் ‘உரிமைகளின் சமத்துவம்’ ஏற்பட வேண்டும்.
அத்தோடு, “இலங்கை தினக் கொண்டாட்டங்களில், நாட்டின் பன்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாச்சார ஊர்வலத்தை நடத்த வேண்டும். இலங்கையின் பன்மைத்துவம் குறித்து முதலில் இலங்கையர் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” எனவும் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசனுடன், எம்பி பழனி திகாம்பரம் மற்றும் பல தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.