உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!
Print
சமூக ஊடக உலகில் பெண்கள்: வாய்ப்புகளும் அதிகரிக்கும் சவால்களும்.!!!

Share :

காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!

ஒரு ஊரின் வளர்ச்சியும் அதன் எதிர்காலமும் அந்த ஊரின் பொதுச் சொத்துகளை எவ்வாறு பாதுகாத்து மேம்படுத்துகின்றோம் என்பதிலேயே பெருமளவில் தங்கியுள்ளது. அந்த வகையில் கடற்கரை என்பது ஒரு இயற்கை வளம் மட்டுமல்ல; அது ஒரு நகரத்தின் முகம், அதன் அடையாளம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் முக்கிய மையமாகும்.

காத்தான்குடி போன்ற கடலோர நகரங்களுக்கு கடற்கரை என்பது மிகவும் முக்கியமான பொதுச் சொத்து. அது சுற்றுலா வாய்ப்புகளையும், சிறிய அளவிலான வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் ஒரே நேரத்தில் தாங்கி நிற்கும் இடமாகும். எனவே இந்த வளத்தை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரிப்பது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும்.

கடந்த காலங்களில் காத்தான்குடி கடற்கரையின் சுத்தம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இந்த விடயம் பேசப்பட்டதுடன், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூட கடற்கரையின் சுத்தம் குறித்து கருத்து வெளியிட்ட சம்பவங்களும் இடம்பெற்றன. இது நமது சமூகத்திற்கு ஒரு எச்சரிக்கை மணி போல அமைந்தது.

கடற்கரை அசுத்தமாக இருந்தால் அது அந்த ஊரின் மரியாதைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மாறாக, சுத்தமான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட கடற்கரை ஒரு நகரத்தின் பொருளாதாரத்தையும் சுற்றுலா வளர்ச்சியையும் முன்னேற்றும். அதனால் தான் கடற்கரைப் பகுதிகளை பராமரிக்க ஒரு முறையான நிர்வாக கட்டமைப்பு அவசியமாகிறது.

இந்த பின்னணியில், காத்தான்குடி நகரசபை கடற்கரைப் பகுதியை மூன்று பகுதிகளாகப் பிரித்து தனியாருக்கு குத்தகைக்கு வழங்கும் தீர்மானத்தை எடுத்தது. நகரசபை அமர்வில் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் (தீர்மான இலக்கம் 2025/93) கடற்கரையை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது.

அதன்படி, அன்வர் பள்ளிவாயல் முன்றல் முதல் பால்வத்த ஓடை வரை உள்ள பகுதி சுமார் 19 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் விலைமனுவில் தனிநபர் ஒருவருக்கு குத்தகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் நோக்கம் கடற்கரையின் சுத்தம், கழிவு அகற்றல் மற்றும் ஒழுங்கை பேணுவதாகும்.
ஆனால் நடைமுறையில் இது தொடர்பாக சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. நகரசபை மதிப்பீட்டில் 8,000 ரூபாய் மதிப்பிடப்பட்ட கடைகளுக்கு மாதம் 30,000 ரூபாயும் 200,000 ரூபாய் முன்பணமும் கோரப்படுவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதேபோல் ஐஸ் கிரீம் விற்பனை வாகனங்களுக்கு 10,000 ரூபாயும், வடை மற்றும் சிறிய உணவுக் கடைகளுக்கும் அதே அளவு கட்டணமும் கோரப்படுவதாக கூறப்படுகிறது. தினமும் 2,000 அல்லது 3,000 ரூபாய் வருமானம் மட்டுமே ஈட்டும் சிறிய வியாபாரிகளிடம் கூட தினசரி 400 ரூபாய் வசூலிக்கப்படுவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒரு நாளைக்கு 3,500 ரூபாய் வருமானம் ஈட்டும் வியாபாரி ஒருவர் 400 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், தனது குடும்ப வாழ்வாதாரத்தை எவ்வாறு நடத்துவது என்பது அவர்களின் முக்கியமான கேள்வியாக உள்ளது.

அதேவேளை, குத்தகையை பெற்றுள்ள தரப்பினருக்கும் சில நியாயமான காரணிகள் உள்ளன. ஏலமாக சுமார் 21 இலட்சம் ரூபாய்க்கு குத்தகையை பெற்றுள்ளதால், தினசரி சராசரியாக 6,000 ரூபாய் செலவுகளும், ஊழியர்களுக்கான சம்பளங்களும் அவர்களுக்கு இருக்கின்றன.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் புரிதல் குறைபாடு உருவாகியுள்ளது. இந்த நிலை நீடித்தால் அது கடற்கரை அபிவிருத்திக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரே வழி திறந்த கலந்துரையாடல்தான். நகரசபை நிர்வாகம், குத்தகைதாரர் மற்றும் கடற்கரை வியாபாரிகள் ஆகிய மூன்று தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து நியாயமான கட்டண அமைப்பை தீர்மானிக்க வேண்டும்.

அரசியல் தலையீடுகள் அல்லது சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றச்சாட்டுகள் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்காது. மாறாக அது சமூகத்தில் தேவையற்ற பிளவுகளையும் முரண்பாடுகளையும் உருவாக்கும்.

நகரசபை புதிய கட்டணங்களை அறவிட விரும்பினால் அதற்கான சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும். நகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ், முதலில் சபை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். பின்னர் உபவிதிகள் தயாரித்து அமைச்சரின் அனுமதி பெறப்பட்டு அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்பே அந்த கட்டணம் சட்டபூர்வமாக அமுலுக்கு வரும்.

இதன் பின்னர் பொதுமக்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு, தேவையான சந்தர்ப்பங்களில் மேல்முறையீடு செய்யும் உரிமையும் வழங்கப்பட வேண்டும்.

எனவே இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது. எந்த அடிப்படையில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை நகரசபை மக்களிடம் தெளிவாக விளக்க வேண்டும்.

காத்தான்குடி கடற்கரை என்பது ஒரு மணல் பரப்பு மட்டுமல்ல; அது அந்த நகரத்தின் அடையாளம், பொருளாதார வாய்ப்பு மற்றும் எதிர்கால சுற்றுலா வளர்ச்சியின் அடித்தளம் ஆகும்.

அந்த வளத்தை சீராக பராமரிப்பதும், அதில் வாழ்வாதாரம் தேடும் சிறிய வியாபாரிகளை பாதுகாப்பதும் இரண்டையும் சமநிலையுடன் முன்னெடுக்க வேண்டியது இன்றியமையாதது.

எனவே நகரசபை தவிசாளர் உடனடியாக அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரையும் அழைத்து ஒரு திறந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்து, எவருக்கும் பாதிப்பு இல்லாத நீடித்த தீர்வை உருவாக்க வேண்டும்.

காத்தான்குடி கடற்கரை எமக்கு இருக்கும் ஒரே ஒரு பொதுச் சொத்து. அந்த சொத்தை பாதுகாப்பதும், அதன் மூலம் அனைவருக்கும் நியாயமான வாய்ப்புகளை உருவாக்குவதும் எமது சமூகத்தின் ஒட்டுமொத்த பொறுப்பாகும்.

✍ எம்.ரி.எம் —

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 744213

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time