காத்தான்குடி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் – சம்மேள உறுப்புரிமையில் இருந்து விலகி – தனித்துவமாக இயங்குவதாக அறிவிப்பு.!!!
காத்தான்குடி 01ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் உறுப்புரிமையில் இருந்து விலகி, இனிமேல் தன்னிச்சையாக இயங்க முடிவு செய்துள்ளது.
தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக, சம்மேளத்தின் யாப்பின்படி இப்பள்ளிவாயலுக்கு தலைமைப் பதவி வழங்கப்படாத நிலையில் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, இன்று (13) முதல் தனித்துவமாக இயங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இம்முடிவு, இன்று இஷாத் தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற புனித ஸஹீஹுல் முஸ்லிம் மஜ்லிஸ் கதீஸ் நிகழ்வின் போது, பள்ளிவாயலின் தற்போதைய தலைமை நிர்வாகி வைத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் அவர்களால் பொதுமக்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது.
அவர் மேலும் கூறியதாவது:
“இனிமேல் சம்மேளனத்தின் எவ்வித முடிவுகளையும் இப்பள்ளிவாயல் நடைமுறைப்படுத்தாது. கூட்டு உழுகிய்யா, கூட்டு ஸக்காத், நோய் நிவாரண நிதி திரட்டல், ஹஜ் வழியனுப்பல் போன்ற நிகழ்வுகளிலும் எங்கள் பள்ளிவாயல் தனித்துவமாக செயல்படும்.”
இதனுடன், டாக்டர் ஜாபிர் தலைமையிலான இடைக்கால நிர்வாகத்துக்கு, மஹல்லா ஜமாஅத்தார்களும், ஜமாஅத்தார் சங்கத்தினரும் அதிகளவில் ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பள்ளிவாயல் சம்மேளத்தின் இவ்வாறான புறக்கணிப்பு நடவடிக்கைகள், முன்னாள் தலைவர் சுபைர் அவர்களின் காலத்திலும் இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலை தொடருமானால், சம்மேளனோடு இணைந்துள்ள ஏனைய பள்ளிவாயல்கள் கூட தன்னிச்சையான முடிவுகளை எடுக்கக்கூடும் என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.







