மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்; கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவிப்பு.!!!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அனைத்து மீனவ சமூகத்தினரையும் கேட்டுக்கொள்கிறது.
வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்புகளின்படி, இந்தக் கடற்பகுதிகள் எதிர்வரும் நாட்களில் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று (18) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான பகுதிகளில் கடலோர மீன்பிடியில் ஈடுபடும் ஒரு நாள் சிறிய படகுகள் மற்றும் ஓஎப்ஆர்பி படகுகள் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.
இன்று (19) திகதியுடன் தொடர்புடையதாக வெளியிடப்பட்ட வானிலை அறிக்கைகளும் இந்தக் கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என்பதையே காட்டுகிறது. இந்த அறிவிப்புகளைப் பொருட்படுத்தாமல், நேற்று மாலை மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற சில மீன்பிடி படகுகள் சிக்கல்களை எதிர்கொண்டதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
சிலாபப் பிரதேசத்தில் ஒரு மீன்பிடி படகு விபத்துக்குள்ளானது, ஆனால் அதில் இருந்த மீனவர்கள் எவ்வித பாதிப்புமின்றி கரைக்குத் திரும்ப முடிந்தது. மேலும் சில படகுகள் உரிய நேரத்தை விடத் தாமதமாக கரைக்குத் திரும்பியுள்ளன, ஒரு படகு இதுவரை கரைக்குத் திரும்பவில்லை. எவ்வாறாயினும், அந்தப் படகும் விரைவில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்புப் பகுதியிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற சுமார் ஐந்து மீன்பிடி படகுகள் சீரற்ற காலநிலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக போர்ட் சிட்டி இற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஜூலை 15ஆம் திகதி கடலுக்குச் சென்ற ஒரு பல நாள் மீன்பிடிப் படகின் தொழிலாளர் ஒருவர் ஜூலை 19ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாகப் படகு கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, இலங்கை பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, எதிர்வரும் சில நாட்களிலும் சீரற்ற காலநிலை நிலவலாம். புத்தளம் தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், கடல் அலைகள் 2.5 – 3 மீற்றர் வரை உயரக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலைகள் சிறிய மீன்பிடிப் படகுகளுக்குப் பாதுகாப்பானது அல்ல. காலநிலை சீரடைந்தவுடன் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் உறுதியளிக்கிறது. அதுவரை, கடற்றொழில் திணைக்களம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், அதன்படி நடந்துகொள்ளுமாறும் அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
புத்தளம் தொடக்கம் திருகோணமலை வரையான வடக்கு பிரதேசங்களில் உள்ள மீனவர்களும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் செல்லும்போது கடலின் தன்மை மற்றும் காலநிலை நிலைமைகள் குறித்து மிகுந்த கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.