போதைப்பொருள் ஒழிப்பு தேசிய திட்டம்: ஊடகவியலாளர்களின் பங்கு குறித்து அறிவூட்டும் செயலமர்வு.!!!
ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வேண்டுகோளுக்கமைய, அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்த ‘முழு நாடுமே ஒன்றாக’ செயற்றிட்டத்தின் கீழ், தமிழ் மொழியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பங்கை வலுப்படுத்தும் நோக்குடன் அறிவூட்டும் செயலமர்வு இன்று (26) புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார அவர்களின் நேரடி வழிகாட்டலில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பங்கேற்று கருத்தரங்கத்தை பயனுள்ளதாக மாற்றினர்.
செயலமர்வில் வளவாளர்களாக தேசிய அபாயகர ஒழுங்கற்ற ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு–கிழக்கு இணைப்பாளர் எம்.எம்.ஜி.பீ.எம். ரஷாத், ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சந்தன சூரியபண்டார ஆகியோர் இணைந்து தமது நிபுணத்துவ கருத்துக்களை முன்வைத்தனர்.
இச்செயலமர்வில் போதைப்பொருள் பாவனையை முழுமையாக ஒழிக்கும் தேசிய செயற்றிட்டத்தில் ஊடகவியலாளர்கள் ஆற்ற வேண்டிய பங்கு குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மீடியா போரத்தின் ஸ்தாபகப் போசகர், தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு செயற்பாட்டை வலுப்படுத்தினர்.




