சுத்தமானதும் பசுமையானதுமான நகரை நோக்கிய – தேசிய வேலைத்திட்டம் காத்தான்குடியில் ஆரம்பம்.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ், எம்.பஹத் ஜூனைட்)
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் “க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து, காத்தான்குடி நகரசபையின் கீழ் இயங்கிவரும் கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு, திண்மக் கழிவுகளை தரம்பிரித்து மீள்சுழற்சி செய்யும் இயந்திரத்தை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும், திண்மக் கழிவு முகாமைத்துவ மீள்சுழற்சி செய்யும் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று (23) செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடி மெரைன் ரைவில் அமைந்துள்ள ஸஹா மெரைன் மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பிரதம அதிதிகளாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன செனரத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
அழைப்பு அதிதிகளாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உப செயலாளர் மகேசி கொடிப்பிலி ஆராச்சி, கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இசுரு அனுராத விஜேசிங்க, தேசிய தின்மக்கழிவு மேலாண்மை ஆதரவு மையத்தின் உதவி பணிப்பாளர் மதுசிகா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் றிப்கா ஷபீன், காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத், கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்புச் செயலாளர் அப்துல்லாஹ், காத்தான்குடி கிளீன் ஸ்ரீ லங்கா ஒருங்கிணைப்பாளரும், சுற்றாடல் அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான எம்.பி.எம். பிரதெளஸ் நளிமி உட்பட அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள், நகரசபை உறுப்பினர்கள், உலமாக்கள், ஊழியர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், தேசிய மக்கள் சக்கயியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி நகரசபையின் கீழ் இயங்கிவரும் கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு இலங்கையில் முதன் முதலாக திண்மக்கழிவுகளைத் தரம்பிரித்து மீள் சுழற்சி செய்யும் இயந்திரத்தினைக் கொள்வனவுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ரூபா 50862246.97 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், திண்மக்கழிவுகளைத் தரம்பிரித்து மீள் சுழற்சிசெய்யும் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


























