“பொன்னாடைகள் வேண்டாம்; சமூக சேவை வெற்றியடைய துஆ செய்யுங்கள்” – கலாநிதி முபாறக்.!!!
-நூருல் ஹுதா உமர்-
சமூக சேவைக்கு வழங்கப்படும் கௌரவங்களையும் புகழ்ச்சிகளையும் விட, சமூக முன்னேற்றத்திற்காக அனைவரும் துஆ செய்வதே முக்கியம் என சாய்ந்தமருதின் சமூக செயற்பாட்டாளர் கலாநிதி எம்.எஸ்.எம். முபாறக் ஹாஜியார் தெரிவித்தார்.
சிலோன் மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு, அதன் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் நேற்று (16) சாய்ந்தமருது சீபிரீஸ் உணவக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய கலாநிதி முபாறக் ஹாஜியார், தமக்கு வழங்கப்படும் கௌரவங்களை விட சமூக சேவையே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். “எனக்கு பொன்னாடைகள் அணிவித்து கௌரவிப்பதை விட, சமூக நலப் பணிகள் வெற்றிகரமாக அமைய அனைவரும் துஆ செய்ய வேண்டும். நான் அல்லாஹ்வின் திருப்தியை நோக்கமாகக் கொண்டு சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், சமூகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்து தீர்வு காணும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக பைத்துஸ் ஸக்காத் நிதியின் மூலம் பல குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சமூக முன்னேற்றத்தில் ஊடகவியலாளர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், சமூகத்தில் உள்ள பிரச்சினைகள், குறைகள் மற்றும் தேவைகளை வெளிக்கொண்டு வந்து தீர்வுகளை உருவாக்க ஊடகங்களின் ஒற்றுமை அவசியம் என வலியுறுத்தினார்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவது சமூகத்தின் பொறுப்பு எனவும், குறிப்பாக குர்ஆன் வாசிப்பு உள்ளிட்ட மத மற்றும் கல்விசார் நிகழ்ச்சிகள் மூலம் இளம் தலைமுறையை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலாநிதி முபாறக் ஹாஜியார் குறித்து சிறப்பு உரையை சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் நூருல் ஹுதா உமர் நிகழ்த்தினார்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர். மேலும், சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், பிரதித் தலைவர் எம்.வை. அமீர், பிரதி செயலாளர் எம்.எம். ஜபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
சமூக சேவையில் முன்னிலை வகித்து வரும் கலாநிதி முபாறக் ஹாஜியார் தனது 50வது வயதில் கால்பதித்ததையொட்டி, “Inspiring and Role-Modeling Leadership” என்ற தொனிப்பொருளில் சிறப்பு பாராட்டும் வாழ்த்துகளும் நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
இப்தார் நிகழ்வின் சிறப்பு பயானையும் துஆவையும் அஷ்-ஷெய்க் மௌலவி ஐ.எல்.எம். ரஃபி நிகழ்த்தினார். நிகழ்வை சிலோன் மீடியா போரத்தின் உயர்பீட உறுப்பினர் எம்.ஐ.எம். றிம்ஸான் தொகுத்து வழங்கினார்.






