உடனடி சமைத்த உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் திடீர் சுற்றிவளைப்பு – உணவகங்களுக்கு எதிராக வழக்கு.!!!
(நூருல் ஹுதா உமர்)
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொரித்த கிழங்கு வகைகள், உடனடி சமைத்த உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது இரவு நேர திடீர்ப்பரிசோதனை நடவடிக்கை நேற்றிரவு (26) இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி டாக்டர் சகிலா இஸ்ஸதீனின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதனின் வழிகாட்டலில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இப்பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கரையோரப்பகுதி மற்றும் பிரதான வீதிகளிலுள்ள பொரித்த கிழங்கு வகைகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உடனடி சமைத்த உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களில் இரவு நேர உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இத்திடீர் சுற்றிவளைப்பின் போது, உணவகங்கள் பார்வைக்கு உட்படுத்தப்பட்டு அங்கு மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டதோடு, அவ்வுணவகங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.


