சமூக ஊடகங்களில் செல்பி பகிர்வதைத் தவிர்க்குமாறு – பொலிஸார் எச்சரிக்கை.!!!
சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பிற சுற்றுப் பயணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் செல்பி புகைப்படங்கள் அல்லது பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய தகவல்கள் குற்றவாளிகளுக்கோ அல்லது உங்கள் வீடு மற்றும் சொத்துக்களை நோட்டமிடும் நபர்களுக்கோ உதவியாக அமையக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
பத்தரமுல்லை சுஹுருபாயவில் அமைந்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவின் கேட்போர் கூடத்தில் இன்று (11) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இக்கருத்துகளை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது: “நாம் அனைவரும் பண்டிகைக் காலத்தை நோக்கி நகர்கிறோம். உல்லாசப் பயணங்கள், யாத்திரைகள் மற்றும் சுற்றுப் பயணங்களுக்காக பலர் தங்களது கிராமங்களை விட்டு புறப்படுகின்றனர். ஆனால் இந்நாட்களில் சமூக ஊடகங்களில் தாங்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைச் சொல்வதற்காக புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கமாகியுள்ளது.
நீங்கள் நுவரெலியாவில் இருக்கிறீர்கள், காலியில் இருக்கிறீர்கள் அல்லது கதிர்காமத்தில் இருக்கிறீர்கள் என்ற தகவல்களைச் செல்பி புகைப்படங்களின் மூலம் வெளிப்படுத்துவது பொருத்தமானதல்ல. இது உங்களைப் பின்தொடரும் குற்றவாளிகளுக்கோ அல்லது உங்களது வீட்டைப் பற்றிய ஆர்வமுள்ளவர்களுக்கோ சாதகமான தகவலாக மாறக்கூடும். எனவே, நீங்கள் இருக்கும் இடம் குறித்து சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்ப்பது பாதுகாப்பிற்காக மிக அவசியம்,” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பயணங்களுக்காகத் தெரிவு செய்யும் பஸ் அல்லது வாகனங்கள் மற்றும் சாரதிகள் குறித்து சரியான தகவல்களைப் பெற்றிருப்பதும் பாதுகாப்பிற்கான முக்கிய அம்சமாகும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தினார்.