போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் – தண்டனைக்குட்படுத்தப்படுவர் : பிரதி அமைச்சர் சுனில் வட்டகல.!!!
ஹோமகமவில் நேற்று (06) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல,
“போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களை கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட கொள்கலன்களின் உரிமையாளர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் எமக்கு கிடைத்துள்ளன. இந்த அரசியல்வாதிகளே போதைப்பொருள் விநியோக சங்கிலியின் பின்னால் உள்ளனர். இது தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, அவர்கள் தராதரமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்” எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது:
“இவ்வாறான இரசாயனங்களின் ஊடாக போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டிருந்தால், முழு நாடும் சீரழிந்திருக்கும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள், அவர்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்களை இனங்காண சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற சந்தர்ப்பங்களில் சந்தேகநபர்களை கைது செய்ய முடியாவிட்டாலும், பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் பெரும்பாலான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் திணைக்களமும் இராணுவமும் இணைந்து முன்னெடுக்கும் சுற்றிவளைப்புக்களின் மூலம் பல குற்றங்கள் இடம்பெறுவதற்கு முன்னரே தடுக்கப்பட்டுள்ளன. இதனை ஜனாதிபதியும் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான கலந்துரையாடல்கள் பிரதமர் தலைமையில் தனித்துவமாக நடைபெற்று வருகின்றன.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் முதலில் விநியோக சங்கிலி முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். அதற்காக மூன்று படைகளும் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையில், போதைப்பொருள் தயாரிப்புக்கு தேவையான இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களுடன் தொடர்புடைய சில அரசியல்வாதிகளின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளுக்கமைய யார் எங்கு இருந்தாலும், தராதரமின்றி அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். சிலர் பட்டப்படிப்பு காரணமாகவும், சிலர் சுகயீனத்துக்காகவும் வெளிநாடு சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சட்டம் தவிர்க்க முடியாத வகையில் நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.