வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு; இம்மாத சம்பளம் வழங்கப்படாது – தபால் மா அதிபர்.!!!
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது என்று தபால் மா. அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி, மாதாந்திர சம்பளம் பெற விரும்பினால் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தொழிற்சங்கங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வேலைநிறுத்தம் காரணமாக இதுவரை சுமார் 140 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மத்திய தபால் நிலையத்தில் குவிந்து கிடந்த தபால் பைகள் விநியோகப்படுத்தப்பட்டு வருவதாகவும் தபால் மா. அதிபர் தெரிவித்தார்.
ருவான் சத்குமார மேலும் கூறியதாவது, சம்பளம் வழங்குவதற்கு திறைசேரியிலிருந்து நிதி பெறப்பட வேண்டும். வேலைநிறுத்தத்தின் போது சம்பளக் கொடுப்பனவுகளுக்கு நிதி விடுவிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கடமைக்குத் திரும்பியவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று கடமைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.