மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலைக்கு பிரதமர் விஜயம்.!!!
(மட்டக்களப்பு செய்தியாளர்)
பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலைக்கு நேற்று (01) விஜயம் செய்த போது, பாடசாலைச் சமூகத்தினரால் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமருடன் மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் வணிதா செல்லப்பெருமாள் உள்ளிட்டோரும் இணைந்து சென்றிருந்தனர்.
இந்நிகழ்வின் போது, பாடசாலையின் இனியம் வாத்தியக்குழு மாணவர்கள் வாத்திய இசையுடன் நடனமாடி பிரதமரையும் அதிதிகளையும் வரவேற்றனர்.
பாடசாலையின் முதல்வர் மு.சபேஸ்குமார் தலைமையுரையாற்றியபோது, “இப்பாடசாலையின் நூற்றாண்டு வரலாற்றில் பிரதமர் ஒருவர் வருகைதந்தது இதுவே முதன்முறையாகும்” எனக் குறிப்பிடுவதுடன், பாடசாலை மாணவர்களின் கல்விச் சாதனைகள் மற்றும் இணைப்பாடவிதான வெற்றிகளைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
சுமார் 3,000 மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில், 1976ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 200 மாணவர்கள் மட்டுமே அமரக்கூடிய ஒன்றுகூடல் மண்டபம் ஒன்றே உள்ளதெனவும், பல்வேறு பெளதீகவளக் குறைபாடுகள் மத்தியிலும் மாணவர்கள் சிறப்பாக சாதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பாடசாலை ஆசிரியையொருவரால் பாடசாலை தொடர்பான விபரங்கள் காட்சியளிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
பிரதமர் தனது உரையில், “மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இயன்றவரையில் தாம் கருத்தில் கொள்வேன். தற்போதைய கல்வி முறையில் மாற்றம் அவசியம். கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதன்போது, அதிபரால் பிரதமருக்கு ஞாபகச்சின்னம் வழங்கப்பட்டதுடன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினராலும் ஞாபகச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், மாணவி ஒருவரால் பிரதமரின் உருவம் பென்சில் வர்ணத்தினால் வரையப்பட்ட ஓவியமும் வழங்கப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் அதிபர், ஆசிரியர்கள், இனியம் வாத்தியக்குழு மாணவர்கள் ஆகியோர் பிரதமருடன் நினைவுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.







