கண்டி–மஹியங்கனை வீதி பயன்பாட்டில் கட்டுப்பாடு : பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள்.!!!
கண்டி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், பாறை மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், கண்டி–மஹியங்கனை சாலையை முடிந்தவரை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதன்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மலைப்பாங்கான பகுதிகளில் சாலைகள் ஆபத்தான நிலையைக் கொண்டுள்ளதுடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி–மஹியங்கனை சாலையில் பல சிறிய பாறை மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இப்படியான நிலையில் அவ்வழியாக பயணிக்கும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் அறிவுறுத்தினார்.
“அத்தியாவசிய சேவைகள், அவசர தேவைகள் தவிர, இந்த சாலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குங்கள். பொழுதுபோக்கிற்காக மீமுரே பகுதிக்கு செல்லும் பயணங்களை முற்றிலும் நிறுத்துங்கள்” என மாவட்ட செயலாளர் வலியுறுத்தினார்.
மேலும், கண்டி மாவட்டத்தில் எதிர்பாராத பேரிடர் நிலை ஏற்பட்டால், காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் மீட்புப் பிரிவுகளும் பேரிடர் மேலாண்மை பிரிவுடன் இணைந்து செயல்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.