அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பஸ்களில்; பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் – பிமல் ரத்நாயக்க.!!!
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு ஆசனப் பட்டி அணிவதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, இது ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் முக்கிய அம்சமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பாடசாலை பஸ்கள், அலுவலக சேவைப் போக்குவரத்து பஸ்கள், சுற்றுலா பஸ்கள் மற்றும் பிற பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகளை பொருத்த சுமார் 3 மாத கால அவகாசம் வழங்கப்படும்.
முன்னர் 2,000 ரூபாவாக இருந்த ஆசனப் பாட்டிகளின் விலை தற்போது 5,000 முதல் 7,000 ரூபா வரை உயர்ந்துள்ளதாகவும், இது நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையால் பரிசீலனை செய்யப்பட வேண்டியதுதான் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நீண்ட தூர சேவை பஸ்களில் ஆசனப் பட்டி கட்டாயம் தொடர்பாக மக்களின் கருத்துகள் சேகரிக்கப்பட்டு, எதிர்காலத்தில் இதனை அனைத்து நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. Citra Innovation Lab நிறுவனத்தின் ஊடாக பயணிகள், சாரதிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட 2,100 பேரிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேவையான சட்ட திருத்தங்களைச் செய்து, அதிவேக நெடுஞ்சாலைக்கு நுழையும்போது வாகன உதிரிப்பாகங்களின் தரத்தை பரிசோதித்து புள்ளிகள் வழங்கும் முறையையும், டயர்கள் தேவையான தரத்தில் இல்லாவிட்டால் வாகனங்களை நுழைய அனுமதிக்கமாட்டாத விதிமுறையையும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகள், வான்கள் உட்பட தனியார் போக்குவரத்துத் துறையின் சாரதிகளுக்காக நலன்புரி நிதியத்தை உருவாக்குவதற்கான பணிகள் நிறைவடைந்து, அதற்கான சட்டமூலம் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும்.
நீண்ட தூர சேவை மற்றும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களின் நிறுத்துமிடம், புகையிரத சேவையின் நவீனமயமாக்கல் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான பரிந்துரைகள் வழங்க இரண்டு உப குழுக்கள் நியமிக்கப்பட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
மேலும், கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி, அதன் நிறைவைப் பற்றியும், பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய விடயங்களையும் குழு பரிசீலித்து பரிந்துரைகள் வழங்கியது.