இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக: அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவு.!!!
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீளஸ்தாபிக்கும் கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (20) நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் கௌரவ டேவிட் கிரேகரி பைன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க இந்தச் சங்கத்தின் செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) கீதா ஹேரத் பொருளாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை இரு தரப்பினரும் வலியுறுத்தியிருந்தனர். விளையாட்டு, சுற்றுலா, வர்த்தகம், தொழிலாளர் மற்றும் கல்வி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. நியூசிலாந்து அரசாங்கம் இதுவரை இலங்கைக்கு அளித்து வரும் ஆதரவிற்காக கௌரவ சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
சுற்றுலா, வர்த்தகம் மற்றும் விளையாட்டு, குறிப்பாக பெண்கள் கிரிக்கெட் மற்றும் ஆண்கள் ரக்பி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த எதிர்பார்பப்தாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் கிரேகரி பைன் தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்திற்கான இலங்கை – நியூசிலாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை நிறுவுவது, இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்றும், பரஸ்பரம் நன்மை பயக்கும் முயற்சிகளை முன்னெடுக்கும் என்றும் இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த நிகழ்விற்கு முன்னர், கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவுக்கும், நியூசிலாந்து உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. பாராளுமன்ற மட்டத்திலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது உட்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.








