மட்டக்களப்பில் 40 வருட காணி பிரச்சனைக்கு தீர்வு – 4 ஆண்டுக்குள் ஆவணங்கள் வழங்கப்படுமென மக்கள் நம்பிக்கை.!!!
மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் காணி விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட்டபோது, வலையறவு, திமிலைதீவு, புதூர், சேத்துக்குடா உள்ளிட்ட பகுதிகளில் காணிகள் சுவீகரிக்கப்பட்டவர்களுக்கான மாற்றுக் காணி உறுதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் இன்று (28) மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் உள்ளிட்ட மாவட்ட செயலக காணி பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கடந்த 40 வருடங்களாக வழங்கப்படாமல் இருந்த மாற்றுக் காணிகளுக்கான ஆவணங்களை, தமது அரசாங்கத்தின் வழியாக விரைவில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், நீண்டநாள் நிலுவையில் உள்ள இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசு உறுதியுடன் செயல்படுவதாகவும், இதன் மூலம் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களின் நீண்டநாள் கனவு நனவாகும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியபோது, “நாற்பது வருடமாக கிடைக்காத தீர்வு இந்த அரசாங்கத்தினால் நான்கு வருடங்களுக்குள் பெற்றுக்கொடுக்கப்படும் என நம்புகிறோம்” என தெரிவித்தனர்.