நாளைய பொதுக் கூட்டத்தையொட்டி விஷேட போக்குவரத்து திட்டம் – பொலிஸ் அறிவிப்பு.!!!
மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை (21) நண்பகல் நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் காரணமாக வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இப்பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, பிற்பகல் 02.00 மணி முதல் கூட்டம் நிறைவடையும் வரை, நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகிலுள்ள ஹைலெவல் சந்தியிலிருந்து நாவல வீதியின் நாவல சுற்றுவட்டம் வரையிலான பகுதி (ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கிற்கு முன் உள்ள வீதி) வாகன போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசெளகரியங்களை தவிர்ப்பதற்காக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் கொஹுவளை திசையிலிருந்து நுகேகொடை நகர் ஊடாக நாவல மற்றும் பிட்டகோட்டே திசைகளுக்குச் செல்லும் வாகனங்கள், ஹைலெவல் வீதியின் கம்சபா சந்தியில் இடதுபுறமாக திரும்பி, கட்டிய சந்தி ஊடாக மிரிஹான் மற்றும் நாவல் திசைகளுக்கு பயணம் செய்யலாம்.
பிட்டகோட்டே மற்றும் நாவல திசையிலிருந்து நுகேகொடை நகர் ஊடாக ஹைலெவல் வீதிக்குச் செல்லும் வாகனங்கள், நாவல சுற்றுவட்டத்திலிருந்து கட்டிய சந்தி ஊடாக கம்சபா சந்தி மற்றும் தெல்கந்த சந்தி மூலம் ஹைலெவல் வீதிக்கு செல்லலாம்.
மகரகம திசையிலிருந்து ஹைலெவல் வீதி ஊடாக நுகேகொடை நகருக்கு பயணிக்கும் வாகனங்கள், கம்சபா சந்தியில் வலதுபுறமாக திரும்பி கட்டிய சந்தி ஊடாக பயணம் செய்யலாம்.
பொலிஸார் சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்க, மேற்கண்ட மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.