இலங்கை–அமெரிக்கா பாதுகாப்பு ஒத்துழைப்பு பலப்படும்: பாதுகாப்புப் பிரதி அமைச்சர் – அமெரிக்க பசிபிக் கடற்படைத் தளபதி சந்திப்பு.!!!
இலங்கையின் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. கோலர் ஆகியோருக்கிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று (21) இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் எதிர்நோக்கும் பொதுவான பாதுகாப்புச் சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துதல், அவசரகால இயற்கை அனர்த்தங்களின் போது விரைந்து செயற்படும் திறனை மேம்படுத்துதல் மற்றும் இருநாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அண்மையில் ஏற்பட்ட டித்வா இயற்கை அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்காக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்காவினால் வழங்கப்படவுள்ள புதிய கரையோரக் காவல்படைக் கப்பல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
சட்டவிரோதக் கடத்தல் உள்ளிட்ட எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பதற்காக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மற்றும் இருநாட்டு படைகளுக்கிடையிலான கூட்டுப் பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் அட்மிரல் கோலர் உறுதிப்பாட்டை வழங்கினார். பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்து செயற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.