இலங்கையின் மீட்சி மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து – இராஜதந்திரிகளுக்கு விரிவான விளக்கம்.!!!
‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர்களிலிருந்து நாடு மீண்டு வருவதற்கான தேசிய மீட்சி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் குறித்த விளக்கம், இராஜதந்திர சமூகத்திடம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அமர்வு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்றது.
அவசரகால சூழ்நிலையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் மனிதாபிமான உதவிக்கு, அனைத்து இராஜதந்திரத் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டாளர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இலங்கை இப்போது அவசர பதிலளிப்பு கட்டத்திலிருந்து, மீட்பு மற்றும் மறுசீரமைப்பு கட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக பிரதமர் அமரசூரிய குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை முழுமையாக மீட்டெடுப்பது அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமையாகும் என அவர் வலியுறுத்தினார்.
அபிவிருத்திக் கூட்டாளர்கள் உதவியுடன் விரிவான தேவைகளுக்கான மதிப்பீடு நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவுகள் எதிர்கால புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு திட்டங்களுக்கு வழிகாட்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த அமர்வில் சுற்றுலாத் துறை பங்குதாரர்கள், இலங்கையை பாதுகாப்பான சுற்றுலா தளமாகத் தொடர்ந்து பரிந்துரைக்க இராஜதந்திர சமூகத்தை ஊக்குவித்தனர். மேலும், அடிப்படைத்தளத்தில் நடைபெறும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப பயண ஆலோசனைகளை மறுஆய்வு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அமர்வில் கலந்து கொண்ட இராஜதந்திரப் பிரதிநிதிகள், இலங்கையுடனான தங்களது ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், நாட்டின் மீட்சி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் வழங்கினர்.


