பொய்யான செய்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர்.!!!
●அனர்த்த காலத்தில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களுக்கு இடமில்லை.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த முக்கியமான நேரத்தில், பொய்யான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் எச்சரித்துள்ளார்.
பொதுமக்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதன்பேரில் கணினி புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இன்று (01) முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர், அனர்த்தத்திற்குப் பிந்தைய காலத்தில் அரசு மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்நேரத்தில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்பும் சில சமூக ஊடக பயனாளர்கள் மிகப்பெரிய பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் கூறினார்.
பொதுமக்களின் மனதில் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் தகவல்களை வெளியிடுவது மிகப் பெரிய தவறாகும். பொய்யான செய்திகளைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
“இந்த அனர்த்த காலத்தில் நாடு ஒன்றுபட்டு செயல்படும் இந்த நேரத்தில், உண்மைக்குப் புறம்பான மற்றும் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்” என்று அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், நிவாரண முகாம்களிலும் சில குற்றச் சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்,
கற்பழிப்பு, அத்துமீறல், திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர எண்கள்:
- சுற்றுலா பொலிஸ் பிரிவு பணிப்பாளர்: 0718591894 / 0112421070 / 1912
- விமான நிலைய சுற்றுலா பொலிஸ் பொறுப்பதிகாரி: 0718596057
- விமான நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி: 0718591640
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில், பொலிஸ் தலைமையகத்தில் 24 மணிநேர விசேட நடவடிக்கை பிரிவு நிறுவப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனர்த்தத்தால் பாதிப்படைந்தவர்கள் தொடர்பான பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகளை கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்:
0718595884, 0718595883, 0718595882, 0718595881, 0718595880