மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வேகமாக பரவி வரும் தொழுநோய்! கட்டுப்படுத்த சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் பாரிய விழிப்புணர்வு ஊர்வலம்!!!
(நமது செய்தியாளர்)
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் அதிகளவிலான தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் இன்று (11) காலை பாரிய அளவிலான விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் வழிகாட்டலில் குறித்த விழிப்புணர்வு பேரணி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு இடம்பெற்றது .
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தேவசிங்கம் டிலக்சன் தலைமையில் ஆரம்பமான ஊர்வலத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலைய பணிப்பாளர் டாக்டர் தர்ஷினி சாந்தரூபன் ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி தட்சண கௌரி தினேஷ் ஆரையம்பதி நகர சபை செயலாளர் எஸ்.சர்வேஸ்வரன் மற்றும் சுகாதாரத் திணைக்கள உயர் அதிகாரிகள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.புலேந்திரகுமார் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இப்பிரதேசத்தில் இவ்வருடம் 20 தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். இதனை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த விழிப்புணர்வு பேரணி இடம் பெற்றதுடன் தொழுநோய் தொடர்பாக பொதுமக்களை விழிப்பூட்டும் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள், வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரத் திணைக்கள ஊழியர் உத்தியோகத்தர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் குறித்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.








