இணையப் பயனாளர்களுக்கு – அவசர எச்சரிக்கை.!!!
இணைய நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி பல்வேறு நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசடியில் ஈடுபடுபவர்கள், தனிநபர்களின் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் (பயனர் பெயர் / கடவுச்சொல்), QR குறியீடுகள் போன்ற இரகசிய தகவல்களை ஏமாற்றி பெறுவது கவனிக்கப்பட்டுள்ளது.
இணைய வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி அல்லது பிற கணக்குகளுக்கு பணத்தை வரவு வைப்பதன் மூலம் பெரும்பாலும் இந்த மோசடிகள் நடைபெறுவதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்புகள் மற்றும் உயர்கல்விக்கான வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி இணையத்தில் மில்லியன் கணக்கான டொலர்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எனவே, இணையத்தைப் பயன்படுத்தும் போது இதுபோன்ற மோசடிகளுக்கு விழிப்புடன் இருக்கவும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளைப் பெறவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தெரியாத நபர்கள் அல்லது சமூக ஊடகக் குழுக்கள் அனுப்பும் இணைய இணைப்புகள் மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டாம். தெரியாத நபர்களின் கணக்குகளுக்கு பணம் வரவு வைப்பது அல்லது வங்கித் தகவல்களை பகிர்வது தவிர்க்கப்பட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள், OTP குறியீடுகள் போன்ற தகவல்களை வெளியிடக்கூடாது. மொபைல் பயன்பாடுகளை நிறுவும் போதும், இணைய இணைப்புகளை அணுகும் போதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமென பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.