மரக்கறி விலைகள் உயர்வு – பச்சை மிளகாய் கிலோ ரூ.3,000.!!!
டிட்வா புயலால் விவசாயப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் சேதத்தினால், மரக்கறி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பல்வேறு காய்கறிகளின் விலைகள் திடீரென உயர்ந்து, பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
சமூகவலைத்தளங்களில் பரவி வரும் காணொளிகளின்படி, சில கடைகளில் பச்சை மிளகாய் கிலோவின் விலை ரூ.3,000 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரட் மற்றும் லீக்ஸ் கிலோ ரூ.2,800 எனவும், கத்தரிக்காய் கிலோ ரூ.800 எனவும் விற்கப்படுகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விநியோகமின்மையை முன்னிட்டு, சில உள்ளூர் கடைக்காரர்கள் விலைகளை மேலும் உயர்த்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பல்பொருள் அங்காடி மற்றும் பலசரக்குக் கடைகளில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை அதிகமாக வாங்கி வரும் சூழலில், பொருட்களின் விலைகள் இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
வானிலை அனர்த்தத்தால் ஏற்கனவே பொருளாதார சிக்கல்களை சந்தித்து வரும் மக்களுக்கு, இவ்விலையேற்றம் கூடுதல் பெரும் சுமையாக அமைந்துள்ளது. அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து, காய்கறி விநியோகத்தை சீர்படுத்தி விலை நிர்ணயத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.