மட்டக்களப்பில் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு திட்டம் அங்குரார்ப்பணம்.!!!
(மட்டக்களப்பு நிருபர்)
இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், போதைப்பொருள் அனர்த்தத்தை முறியடிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய செயற்பாட்டு திட்டம் இன்று (30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இதனுடன் இணைந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு, இன்று (30) மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமான ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின்போது, ஜனாதிபதி அவர்களின் விசேட உரை காணொளி வழியாக ஒளிபரப்பப்பட்டதுடன், “போதைப்பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களினால் சத்தியப்பிரமாண நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் திணைக்கள உயரதிகாரிகள், முப்படை அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.











