ஆரையம்பதி பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் நிறுவ; மட்டு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அனுமதி.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மக்கள் பாதுகாப்பு சவால்கள், போதைப்பொருள் விற்பனை மற்றும் பொலிஸ் சேவை பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (13) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர்கள் கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத், ஞா.ஸ்ரீநேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் தற்போது 600 பொலிஸ் அதிகாரிகள் தேவைப்பட்டாலும் 300 அதிகாரிகள் மட்டுமே பணியில் இருப்பது, புதிதாக பொலிஸ் நிலையங்களை அமைக்க வேண்டிய அவசியம், 706 பெண்கள் மற்றும் சிறுவர்கள் உரிய பராமரிப்பின்றி இருப்பது, சட்டவிரோத மணல் அகழ்வு, பொதுமக்கள் சொந்தமான இடங்களில் பாதுகாப்புப் படையினர் முகாமிட்டிருக்கும் நிலைமை போன்ற பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கான தீர்வுகளை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கான ஆலோசனைகளை அமைச்சர் ஆனந்த விஜேபால வழங்கியதுடன், ஆரையம்பதி பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் ஒன்றை நிறுவ அனுமதி அளித்தார். மேலும், எதிர்வரும் மாதத்திற்குள் 50 பொலிஸ் அதிகாரிகளை மாவட்டத்திற்கு நியமிப்பதாக உறுதியளித்தார்.
போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த சிறப்பு குழுக்களை அமைக்கவும், பராமரிப்பின்றி இருக்கும் சிறுவர்கள் மற்றும் பெண்களின் நலனை முன்னிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் நிலவும் குறைபாடுகளை வெளிப்படுத்தி, அவற்றிற்கான தீர்வுகளை தேடுவதற்கான வாய்ப்பை வழங்கியமைக்கு அமைச்சர், சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு நன்றியையும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், உள்ளுராட்சி மன்ற தலைவர்கள், ஆணையாளர்கள், பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



