சரித் அசலங்கவின் அபார சதம் மற்றும் மஹீஷ் தீக்சனவின் அதிரடி பந்துவீச்சின் உதவியோடு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இதன்மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1–0 என முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை அணி தொடர் தோல்வி ஒன்றை தவிர்த்திருப்பதோடு தொடரை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் பகல் ஆட்டமாக நேற்று (12) நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் மத்திய வரிசையில் வந்த அணித் தலைவர் சரித் அசலங்க தனித்து போராடினார்.
ஒருமுனை விக்கெட்டுகள் அடுத்தடுத்து பறிபோனபோதும் மறுமுனையில் அவர் வேகமாக ஓட்டங்களை சேர்த்தார். குறிப்பாக அவர் 6 ஆவது விக்கெட்டுக்கு துனித் வெல்லாலகேவுடன் இணைந்து 67 ஓட்டங்களை பெற்று ஸ்திரமான ஓட்டங்களை பெற உதவினார். வெல்லாலகே 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த பின்னரும் அவர் அதிரடியாக ஓட்டங்களை சேர்த்தார்.
இதன்மூலம் இலங்கை 200 ஓட்டங்களை தாண்டியது. ஒருநாள் போட்டிகளில் தனது 4 ஆவது சதத்தை பூர்த்தி செய்த அசலங்க 126 பந்துகளில் 14 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 127 ஓட்டங்களை பெற்றார்.
இதன்மூலம் இலங்கை அணி 46 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றது. இதன்போது அவுஸ்திரேலிய அணி சார்பில் சீன் அபோட் அதிகபட்சம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவுஸ்திரேலிய அணி தனது முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் இன்றியே இந்தப் போட்டியில் களமிறங்கியது.
தொடர்ந்து இலகுவான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட வந்த அவுஸ்திரேலிய அணியின் முதல் 4 விக்கெட்டுகளையும் 31 ஓட்டங்களுக்கே வீழ்த்த இலங்கை பந்துவீச்சாளர்களால் முடிந்தது. குறிப்பாக அசித்த பெர்னாண்டோ அவுஸ்திரேலிய ஆரம்ப விக்கெட்டுகளை சாய்த்த நிலையில் மஹீஷ் தீக்சன மத்திய வரிசையில் முக்கிய விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு கடைசி வரை மீள முடியாமல் போனது. ஆஸி அணி 33.5 ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கே சுருண்டது. அதிகபட்சமாக அலெக்ஸ் கர்ரி 41 ஓட்டங்களை பெற்றார்.
மஹீஷ் தீக்சன 4 விக்கெட்டுகளை பதம்பார்த்த நிலையில் அசித்த பெனாண்டோவுடன் துனித் வெல்லாலகே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வனிந்து ஹசரங்க மற்றும் பந்துவீச்சிலும் உதவிய சரித் அசலங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் பகல் ஆட்டமாக இன்று (14) நடைபெறும்.







