வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு புகையிரத சேவை – புனரமைப்பு பணிகள் தீவிரம்.!!!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடும் வெள்ள அனர்த்தத்தினால் கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீளச் செயல்படுத்தும் நோக்கில் புனரமைப்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புகையிரத சேவைகள் கடந்த மாதம் 25ஆம் திகதி முதல் இன்று (18.12.2028) வரை தொடர்ச்சியாக 24 நாட்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தினசரி பயணிகள் மட்டுமன்றி, பல்வேறு அத்தியாவசிய சேவைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இதனிடையே, மன்னம்பிட்டி தொடக்கம் மட்டக்களப்பு வரையிலான வெள்ளத்தால் சேதமடைந்த புகையிரத பாதைகளை இனங்கண்டு, அவற்றை கட்டம் கட்டமாக சீரமைக்கும் பணிகள் புகையிரத திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பாதிக்கப்பட்ட தண்டவாளங்கள், மண் சரிவு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் பாலப் பகுதிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் கிழக்கு மாகாண மக்களின் நாளாந்த வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அரச ஊழியர்களின் தூரப் பிரயாணங்கள், தபால் பொதிகளை எடுத்துச் செல்லும் சேவைகள், எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட சரக்கு புகையிரத சேவைகளும் இதனால் முடங்கியுள்ளன.
புனரமைப்பு பணிகள் விரைவாக நிறைவு பெற்று, புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.