எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் உயரலாம் – கெமுனு விஜேரத்ன.!!!
எரிபொருள் விலைகள் சிறிதளவு குறைக்கப்பட்டிருந்தாலும், எதிர்வரும் மாதங்களில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை உருவாகலாம் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, பேருந்து சேவைகளை இயக்குவதில் பெரும் நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.
தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின்படி, கொழும்பு பகுதிகளில் ஒரு லீற்றர் டீசலுக்கு 2.5 முதல் 3 கிலோமீட்டர் வரை பேருந்துகள் பயணிக்க வேண்டும். எனினும், தற்போதைய கடும் வாகன நெரிசல் காரணமாக, ஒரு லீற்றர் டீசலுக்கு 2 கிலோமீட்டருக்கும் குறைவான தூரமே பயணிக்க முடிவதாக அவர் தெரிவித்தார்.
இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக, எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு முன்னதாக பேருந்து கட்டணங்களில் திருத்தம் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக, குறுகிய தூர சேவைகளுக்கான ஆரம்பக் கட்டணத்தை சுமார் 5 முதல் 6 ரூபாவால் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பொதுப் போக்குவரத்து துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என அவர் விமர்சித்தார்.
அத்துடன், போக்குவரத்துத் துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடையே ஊழல் நிலவுவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார்.
நாடெங்கிலும் சுமார் 13,000 முதல் 14,000 வரையிலான தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ள போதிலும், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பேருந்து சேவையைத் தொடர்வது தற்போது மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.