ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் – வடக்கு காணி விடுவிப்பு, ஒலுவில் துறைமுகம் குறித்து தீர்மானங்கள்.!!!
பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (07) நடைபெற்றது.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறத்தல் மற்றும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுத்தல் போன்ற விடயங்களில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருகோணமலை, மனையாவெளி பகுதியில் அமைந்துள்ள ‘சாண்டி பே’ கடற்கரையை பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது குறித்தும், மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும், ஒலுவில் துறைமுகப் பகுதியில் நிலவும் மண்ணரிப்புத் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, அத்துறைமுகத்தை வினைத்திறனாகப் பயன்படுத்துவது குறித்து ‘நாரா’ (NARA) நிறுவனத்தின் உதவியுடன் புதிய சாத்தியக்கூறு ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சிற்குப் பணிப்புரை விடுத்தார். பாதுகாப்புப் படை வீரர்களின் நலன்புரிச் சேவைகள், ஐ.நா அமைதிப் படையில் அதிகப்படியான வீரர்களை இணைத்தல் மற்றும் விமானப்படையின் ஹெலிகொப்டர் தொகுதியை வலுப்படுத்துதல் போன்ற பாதுகாப்பு ரீதியான முக்கிய நகர்வுகள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.



